தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடல் காலை 10.15 மணிக்கு யாழில் ஆரம்பித்தது.
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்கபட்டதன் பிரகாரம் ஆரம்பித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவது:
தமிழ் பேசும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில்,எமது மக்கள் தொடர்ந்து சந்தித்து கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை, அவை உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்.
அரசாங்க ஆதரவுடன் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டும்.
பல்லின,பழமொழி பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தை கொண்டிருப்பதால் அதனை நம் நிராகிக்கிறோம்.
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளான:
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
- தமிழ் முற்போக்கு கூட்டணி
- தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
- தமிழ் மக்கள் கூட்டணி
- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
- தமிழ் தேசிய கட்சி
போன்ற கட்சிகள் எமது அடுத்த சந்திப்பில் கலந்துகொள்ளக்கூடியதாக அமையும்.
இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது என எமது Lanka4 ஊடகத்திற்கு சுரேந்திரன் குருவசுவாமி நேரடி தகவல் வழங்கினார்.



