மகனுக்கு 'ஏ.பி.சி.டி.இ' என பெயர் வைத்த தந்தை

இந்தோனேசியாவில் ஆங்கில அகர வரிசையான 'ஏபிசிடிஇ.. ' என்னும் எழுத்துகளை தன் மகனுக்கு பெயராக சூட்டியுள்ளார் ஒருவர்.தற்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான புதுமையான பெயர்களை சூட்டவே விரும்புகின்றனர்.
இதற்காக பல வலைதளங்களில் தேடி அதில் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ - ஜூல்பமி தம்பியர் தங்கள் மகனுக்கு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர். ஆம், ஆங்கில அகர வரிசை எழுத்துகளான 'ஏபிசிடிஇஎப் ஜிஎச்ஐஜெகே ஜூஜூ' (ABCDEF GHIJK Zuzu) என பெயர் சூட்டியுள்ளனர்.
12 வயதான அச்சிறுவன் பள்ளியில் தன் பெயரை எழுதியபோது ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கேலி செய்துள்ளனர். இது குறித்து தந்தையிடம் முறையிட்ட பின்னரே, அதுதான் உண்மையான பெயர் எனத் தெரியவந்துள்ளது. இதில் 'ஜூஜூ' என்பது பெற்றோர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துகளாகும். மேலும், தங்களுக்கு அடுத்து பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் 'என்ஓபிக்யூ' (NOPQ), 'ஆர்எஸ்டியூவி' (RSTUV) போன்ற பெயர்களை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் அந்த குறும்புக்கார தந்தை.முன்னதாக கடந்த ஆண்டு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது மகனுக்கு X Æ A-12 என பெயர் சூட்டி இருந்தார். கலிபோர்னியாவின் சட்டப்படி பெயரில் எண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், எண் 12ஐ ரோமன் 12 ஆக மாற்றி, XÆ A-XII என மாற்றிப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.



