வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.
                                                        #Health
                                                    
                                            
                                    Reha
                                    
                            
                                        4 years ago
                                    
                                எளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘வெந்நீர்’. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.
- காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
 - ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பின்னர் நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.
 - தொடர்ந்து வெந்நீர் குடித்தால் உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.
 - மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு ‘ஆவி பிடித்தால்’ மூக்கடைப்பு, தலைப்பாரம் அகன்றுவிடும்.
 - உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும்.
 - மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
 - அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால் கால் வலி மறைவதோடு பாதமும் சுத்தமாகி விடும்.
 - வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள் வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
 - வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே ‘ஜில்’லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.
 - ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும்.
 
இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.
அதேநேரம் வெந்நீரில் தினமும் குளிப்பது உடலுக்கு உகந்ததல்ல. அது எலும்புகளை பலவீனப்படுத்தலாம்.