புகையிலைக் கட்டுப்பாட்டில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
புகையிலைக் கட்டுப்பாட்டுத் துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் சாதனைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டகம் தொடர்பான மாநாட்டின் செயலகத் தலைவர் அன்ட்ரூ பிளாக் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, புகையிலைப் பயன்பாட்டைக் குறைத்தல், புகையிலைப் பெருநோயை எதிர்கொள்ளுதல் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை முன்னெடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், இலங்கையின் புகையிலைக் கட்டுப்பாட்டு அணுகுமுறைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்த விரும்பும் ஏனைய நாடுகளுக்கு அவை சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை (WHO FCTC) நடைமுறைப்படுத்துவதையும், பயனுள்ள புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை முன்னெடுப்பதையும் இலங்கை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.