போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய AI கண்காணிப்பு: கொழும்பில் புதிய திட்டம்!
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில், கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவதற்கு காவல்துறை போக்குவரத்துப் பிரிவு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரை மேற்கோள்காட்டி தேசிய நாளிதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த கண்காணிப்புக் கருவிகள் ஊடாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் அடையாளம் காணப்படவுள்ளனர்.
அதன்பின்னர், விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கான அபராத அறிவிப்புகள் அவர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.