டுபாயை வீழ்த்திய கொழும்பு! சர்வதேச விமான முன்பதிவில் இரண்டாம் இடம்
2026ஆம் ஆண்டு இறுதி விடுமுறைக் காலத்திற்கான சர்வதேச விமான முன்பதிவுப் பட்டியலில், இந்தியப் பயணிகளின் விருப்பமான வெளிநாட்டுப் பயண இடங்களில் இலங்கையின் கொழும்பு நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
பிரபல பயண நிறுவனமான Cleartrip வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தப் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தைப் பெற்றுள்ள நிலையில், கொழும்பு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன் மூலம், இந்தியப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கிய ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரத்தை கொழும்பு பின்னுக்குத் தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டு இறுதி விடுமுறைக் காலத்திற்கான கொழும்புக்கான விமான முன்பதிவுகள் 9.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Cleartrip தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விமான முன்பதிவு வளர்ச்சியில் வியட்நாமின் ஹனோய் 44.6 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்திலும், ஃபு குவோக் தீவு 33.2 சதவீத வளர்ச்சியுடனும், ஜப்பானின் டோக்கியோ 22.2 சதவீத வளர்ச்சியுடனும் காணப்படுகின்றன.
ஹாங்காங்கிற்கான முன்பதிவுகளும் 14.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு விடுமுறைகளைக் கழிப்பதற்காக ஆசிய நாடுகளுக்குப் பயணிப்பதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கொழும்பின் இந்த முன்னேற்றம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சாதகமான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.