நவம்பர் 30ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் ஆதரவு!
எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அச்சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (27) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, தமது கோரிக்கைகளுக்குத் திருப்திகரமான தீர்வுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
இந்நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறான முறையில் பங்கேற்கவுள்ளது என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.