நவம்பர் 30ஆம் திகதி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பா? – இன்று இறுதித் தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் பங்கேற்பதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்று (27) காலை நடைபெறவுள்ளது.
மருத்துவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில் கிடைக்காத நிலையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதிலும், மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு 44 பில்லியன் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் வருடாந்தம் 100 பில்லியன் ரூபாய் வரியாகச் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு உரிய வாய்ப்பை வழங்காவிட்டால், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி அல்லது வேறொரு தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.