தமிழக கவர்னரை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாகச் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது ஆகியவை குறித்து கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனு அளிக்கச் சென்ற பொதுமக்களில் ஒருவரைச் சட்டமன்றத் துணைத் தலைவர் தாக்கியதாக எழுந்துள்ள புகார், அயனாவரம், காரமடை, ஆலந்தூர் ஆகிய இடங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள், காவல் மற்றும் நீதிமன்றக் காவலில் நிகழ்ந்துள்ள குறைந்தது ஒன்பது மரணங்கள் உள்ளிட்டவை குறித்து கவர்னரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பெட்டமைன், சென்னையில் 71.24 கிலோ ஹெராயின் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் மத்திய அரசின் அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இவற்றின் பின்னணியில் உள்ள வலையமைப்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.