24 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை – இன்று இரவு 11 மணி வரை அமுல்!
நாட்டின் 24 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (24) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதுடன், பலத்த காற்று மற்றும் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாகவோ அல்லது சில பகுதிகளிலோ இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படுவதுடன், மின் உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் சேதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இடியுடன் கூடிய மழை நெருங்கும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற விளையாட்டு, கட்டுமானம் மற்றும் விவசாய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறும், கடற்கரைகள், ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வானிலை அறிவிப்பு இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.