தனியொரு மாணவியின் முயற்சியில் பசுமையாகும் முரசுமோட்டை – 150 மரக்கன்றுகள் நடுகை!
கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் உயர்தர மாணவியான யோகேஸ்வரன் தரணிகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி முன்னுதாரணமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
தனது கிராமத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அதனைப் பசுமையாக்கும் நோக்கில் கிராம மக்களை ஒன்றிணைத்து முரசுமோட்டை கிராமத்தில் இன்று (24) 150 மரக்கன்றுகளை நாட்டியுள்ளார்.
சுற்றாடல் முன்னோடிக் கழகத்தின் உறுப்பினரான மாணவி தரணிகா, சுற்றாடல் முன்னோடிப் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும், தனது கிராமத்தின் இயற்கைச் சூழலை மேம்படுத்தும் நோக்கிலும் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.
இளம் வயதிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் காட்டி, கிராம மக்களையும் ஒன்றிணைத்துள்ள அவரது முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை மாணவி தரணிகாவின் இந்த முயற்சி எடுத்துக்காட்டுகின்றது.