வடக்கு – கிழக்கின் சுற்றுலா வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை? குறைக்கப்பட்ட 2027 நிதி ஒதுக்கீடு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுற்றுலா வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அந்தத் தொகை 818 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, யாழ்ப்பாண சுற்றுலா அபிவிருத்திக்கான நிதி 130 மில்லியன் ரூபாவிலிருந்து 50 மில்லியன் ரூபாவாகவும், அருகம்பே அபிவிருத்திக்கான நிதி 70 மில்லியன் ரூபாவிலிருந்து 37 மில்லியன் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை முதல் துறைநீலாவணை வரையிலான கடற்கரைப் பகுதிகளைத் திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி செய்வதன் மூலம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவருவதுடன், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத்துறைக்கான காணிகள் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அல்லாமல், தகுதியான முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், புகையிரதம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பதன் மூலம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பான சர்வதேச விமர்சனங்கள், ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மற்றும் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச கேள்விகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதுடன் மட்டுப்படுத்தப்படாமல், பிராந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.