பிரெஞ்சு அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரெனுவாரின் இரண்டு ஓவியங்கள் மீட்பு
தெற்கு பிரான்சில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு திருடப்பட்ட அகஸ்டே ரெனுவாரின் (Auguste Renoir) இரண்டு ஓவியங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ்ட் (impressionist) ஓவியரான ரெனுவார் தனது இறுதி ஆண்டுகளில் வசித்த 'காக்னேஸ்-சுர்-மெர்' (Cagnes-sur-Mer) பகுதியில் உள்ள ரெனுவார் அருங்காட்சியகத்தில், திருடர்கள் வேலியையும் ஜன்னலையும் உடைத்து உள்ளே நுழைந்தபோது இந்த இரண்டு ஓவியங்களும் திருடப்பட்டன.
ஓவியங்களை மீட்ட அதிகாரிகளைப் பாராட்டிய உள்ளூர் மேயர், இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும் ஆழ்ந்த நிம்மதியையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரெனுவார் அருங்காட்சியகத்தில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
ஐரோப்பாவில் சமீபகாலமாக நடந்து வரும் பல முக்கிய கலைப்பொருள் திருட்டுச் சம்பவங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.
காணாமல் போன அந்த இரண்டு ஓவியங்கள் 'போர்ட்ரெய்ட் ஆஃப் மேடம் கொலோனா ரோமானோ' (Portrait of Madame Colonna Romano - 1910) மற்றும் 'ஜியூன் ஃபில் ஆ புய்ட்ஸ்' (Jeune fille au puits - 1886) ஆகியனவாகும்.