இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை: ஜனவரி 22ல் பேச்சுவார்த்தை!

#India #SriLanka #ARREST #Delhi #Fisherman #LANKA4 #discussion #L4
Prasu
35 minutes ago
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை: ஜனவரி 22ல் பேச்சுவார்த்தை!

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காணும் நோக்கில், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு விவகாரமாகும். இதற்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. 

இதற்காக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டங்களில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் (Joint Working Group – JWG) கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல், இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் இலங்கை தரப்பிலிருந்து கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பங்களிப்புடன் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!