தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை! நளிந்த ஜயதிஸ்ஸ
புற்றுநோய், இதய நோய், சிறுநீரக நோய், சுவாசக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த 'விசேட பணிக்குழுவை' நியமிப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முதன்முறையாக, அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சுவையான உணவை வழங்கும் சிறப்புத் திட்டம் மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (6) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மஹரகம வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (6) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முன்னோடித் திட்டம் கதிர்காம மகா தேவாலயத்தின் நிதியுதவி மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் சுமார் 100 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இதனை விரிவுபடுத்த உள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், "அரசாங்க வைத்தியசாலை வரலாற்றில் முதன்முறையாக, சமையலறை என்பதற்குப் பதிலாக 'உணவு மற்றும் பானங்கள் பிரிவு' என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவை மாத்திரம் வழங்காமல், தரமான, ஊட்டச்சத்து மிக்க மற்றும் சுவையான உணவை வழங்கத் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக, சோறு மற்றும் கறிகள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்காமல், தனித்தனியாகப் பரிமாறக்கூடிய விசேட தட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாகத் தொற்றா நோய்கள் உள்ளன. மஹரகம வைத்தியசாலையின் தரவுகளின்படி, ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். அவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இலங்கையில் வருடாந்தம் புதிதாக 35 ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களில் சுமார் 11 ஆயிரம் பேர் மஹரகம வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுகின்றனர். புற்றுநோய், இதய நோய், சிறுநீரக நோய், சுவாசக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த 'விசேட பணிக்குழுவை' நியமிப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மாத்திரமன்றி ஏனைய அமைச்சுகள், தனியார் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தை இந்த வாரத்துக்குள் நடைபெறவுள்ளது. இதன் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கத் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்" என்றார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”