இலங்கை- வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் ஒப்பந்தம்!
இலங்கை பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய தரமுயர்த்துவதற்கும், சர்வதேசமயப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும்; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்தாண்டு காலப்பகுதிக்கு கீழ்வரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
01.இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் மற்றும் தாய்லாந்தின் மஹாமகுட் பௌத்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில், பீடங்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் கல்வி மற்றும் கலாச்சாரச் செயற்பாடுகளை மேம்படுத்தல், ஒத்துழைப்பு ஆய்வுகள், கல்வி செயலமர்வுகள் மற்றும் மாநாடுகளை நடாத்துதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
02.இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நாலந்தா நிறுவகத்திற்கும் கல்வி, ஆய்வு மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் கல்வி ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், கல்வி நிபுணர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் நிபுணத்துவ அறிவைப் பெற்றுக் கொள்ளல், ஆய்வுகூடங்கள் மற்றும் நூலகங்கள் போன்ற பௌதீக வளங்களைப் பயன்படுத்தல் மற்றும் வதிவிடப் பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள் மற்றும் கல்வி மாநாடுகள் மூலம் மனிதவள அபிவிருத்தி, விடயதான அபிவிருத்தி போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்
03.இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் போலந்தின் எஸ் ஜீ எச் வோர்சோ பொருளியல் கல்லூரிக்கும் இடையில் பரஸ்பர ரீதியாக உடன்பாடு எட்டப்பட்ட துறைகளில் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் கல்வி வெளியீடுகள், ஒருங்கிணைந்த மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துதல், கல்வி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்று நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கல்வித் தகவல்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”