ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் அடாவடியாக கற்குவாரி அமைக்க நடவடிக்கை!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
6 hours ago
ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் அடாவடியாக கற்குவாரி அமைக்க  நடவடிக்கை!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் மக்களின் விருப்பிற்கு மாறாக அடாவடித்தனமாக கற்குவாரி ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிடப்பட்டது.

 இந்நிலையில் குறித்தபகுதிக்கு இன்று நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மக்களின் விருப்பிற்கு மாறாக காதாலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கப்பட்டால் மக்களோடு இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார். குறித்த களவிஜயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 காதலியார் சம்மளங்குளம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றினை அமைத்து, பாறைகளை வெடிவைத்து தகர்த்து அகழ்வுசெய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து கிராமமக்களின் எதிர்ப்பினால் குறித்த கற்குவாரி கடந்த 2022ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

 இந்நிலையில் தற்போது மீண்டும் குறித்தபகுதியில் கற்குவாரி ஒன்றினை அமைந்து, கற்களை அகழ்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

 ஏற்கனவே கற்குவாரி அமைக்கப்பட்டதனால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து தாம் மீழுவதற்கு முன்பாக மீண்டும் கற்குவாரி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தமக்கு கவலையளிப்பதாகவும் மக்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். குறிப்பாக ஏற்கனவே கல் அகழப்பட்ட குழியினுள் தமது கால்நடைகள் தவறி வீழ்ந்து இறக்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படடுவதாக இதன்போது கிராமமக்கள் சுட்டிக்காட்டினர்.

 அத்தோடு கடந்த காலத்தில் அங்கு இயங்கிய கற்குவாரியில் கல் உடைப்பதற்காக வெடிவைக்கின்றபோது ஏற்படுகின்ற அதிர்வுகளால் காதலியார் சம்மளங்குளம் கிராமத்திலுள்ள பல வீடுகளின் சுவர்களிலும், ஜன்னல் கண்ணாடிகளிலும், கிணற்றுக் கட்டுகளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தியதுடன்,நேரடியாகவும் காண்பித்தனர்.

 அதேவேளை குறித்த பகுதியில் கற்குவாரி அமைத்து கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன்பிற்பாடு தமது கிராமத்திலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் கிராமமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

 மேலும் குறித்த கற்குவாரி அமைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் அதிர்வுகளாலும், வெளிப்படும் தூசியினாலும் கிராமத்திலுள்ள மூச்சுத்திணறல் நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன், கற்பிணித் தாய்மார்கள்,சிறார்களும், முதியோரும் அதிக பாதிப்புக்களுக்குள்ளாகவேண்டிய நிலை ஏற்படுமெனவும் கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

 எனவே தமது கிராமத்திற்கு பல்வேறு வழிகளிலும் பாதிப்பாக அமைகின்ற கற்குவாரியை, மீண்டும் தமது கிராமத்தில் அமைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறும் இதன்போது கிராமமக்களால் கோரிகை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் முறையீடுகளை நன்கு செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கலந்துரையாடினார். 

 அந்தவகையில் கற்குவாரியின் பாதிப்பு நிலமைகளை ஒட்டுசுட்டான் பிரதேசசெயலரிடம் சுட்டிக்காட்டினார். அத்தோடு ஏற்கனவே கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படக்கூடாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதேசசெயலாளரிடம் வலியுறுத்தினார்.

 அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மக்களுக்கு பலவழிகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றவகையில் காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கற்குவாரி மக்களின் எதிர்ப்பினால் மூடப்பட்டிருந்தஇந்நிலையில் கிராமமக்களின் அனுமதியின்றி, மீண்டும் இக்கிராமத்தில் கற் குவாரி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மக்கள் எம்மிடம் முறையீடுசெய்துள்ளனர்.

 இவ்வாறு அடாவடித்தனமான முறையிலும், மக்களின் விருப்பிற்கு மாறாகவும் கற்குவாரி அமைத்துஇ இங்கு கல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் மக்களோடு இணைந்து வீதயில் இறங்கி பாரிய போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமென உரியவர்களை எச்சரிக்கின்றேன். ஏற்கனவே இங்கு கற்குவாரி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து, மக்களால் இதுவரை மீளமுடியாத நிலை காணப்படுகின்றது.

 எனவே இங்கு மீண்டும் கற்குவாரியை அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்க முடியதென்றே தீர்மானிக்கப்பட்டது.

 இந்நிலையில் இதுதொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலரிடமும் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளேன். கடந்த பிரதேச அபிவிருத்திக்குழுவின் தீர்மானத்தை உரிய இடங்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்தார். 

அத்தோடு கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் பிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய இடங்களில் கலந்துரையாடுவதுடன், மக்களுக்கு பாதிப்பான இந்த கற்குவாரி அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!