அரசியலமைப்புப்பேரவை குறித்து அமைச்சரின் கருத்து: சிவில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம்

#SriLanka
Mayoorikka
1 hour ago
அரசியலமைப்புப்பேரவை குறித்து அமைச்சரின் கருத்து: சிவில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம்

அரசியலமைப்புப்பேரவை குறித்த அமைச்சரவைப்பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்து தொடர்பில் தீவிர கரிசனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியலமைப்புப்பேரவை தமக்குக் கீழ்ப்படிந்து செயற்படவேண்டும் என அரசாங்கம் நினைப்பதாகச் சுட்டிக்காட்டினர்.

 அத்தோடு உரியவாறு இயங்கிவரும் கட்டமைப்புக்களை ஸ்தம்பிதமடையச்செய்யும் வகையிலான கட்டமைப்பு ரீதியான மாற்றம் அவசியமில்லை எனவும், மாறாக பிழைகளை சீரமைக்கும் வகையிலான கட்டமைப்பு மாற்றமே நாட்டுக்கு அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நால்வரின் பெயர்களும் அரசியலமைப்புப்பேரவையினால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, 'பரிந்துரைக்கப்படுபவரை விட, பிறிதொருவர் தகுதியானவர் எனக் கூறும் உரிமை அரசியலமைப்புப்பேரவைக்கு இல்லை. அரச பொறிமுறையை சீர்குலைப்பதற்காகவே அரசியலமைப்புப்பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. 

அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், பரந்தளவில் சிந்தித்து செயற்படவேண்டும். அரச பொறிமுறையை சீர்குலைப்பதற்காகவே அரசியலமைப்புப்பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 அவரது இக்கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் இந்தக் கருத்து அரசியலமைப்புப்பேரவையை, குறிப்பாக அங்கு முன்மொழியப்படும் பரிந்துரைகளுக்கு வாக்களித்த உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் விதத்திலான நடவடிக்கையாகும் எனக் கரிசனை வெளியிட்டார்.

 அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் பெரும்பாலும் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். அதனை நன்கு அறிந்திருப்பதனாலேயே நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுகின்றார். அதேபோன்று கணக்காய்வாளர் நாயக நியமன விவகாரத்தில், அப்பதவிக்குத் தகுதியற்ற நபரின் பெயரை அரசாங்கம் ஏன் முன்மொழிந்தது? அம்முன்மொழிவு தொடர்பில் தொழில்வாண்மையாளர்கள் கூட்டிணைவு தமது அறிக்கை ஊடாகக் கரிசனையை வெளிப்படுத்திய பின்னரும், அம்முன்மொழிவில் இருந்து அரசாங்கம் ஏன் பின்வாங்கவில்லை? என்பதே இங்கு கருத்திற்கொள்ளப்படவேண்டிய முக்கிய பிரச்சினையாகும். அவ்வாறிருக்கையில் பிரச்சினைக்குரிய விடயத்தைப் புறந்தள்ளி, அரசியலமைப்புப்பேரவை உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் அதில் அங்கம் வகிக்காத நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துரைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 அதேபோன்று, 'கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான பெயர் முன்மொழிவுகள் குறித்து எழுந்த எதிர்ப்புக்களை அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயற்பட்டிருப்பதனால், இவ்விடயத்தில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள், விதிகள், பொருத்தப்பாடுகள் பற்றி அறியாமல் அரசாங்கம் இயங்குகின்றது என்றே கருதவேண்டியிருக்கின்றது. 

அரசாங்கம் முக்கிய நியமனங்களுக்குத் தகுதியில்லாத நபர்களின் பெயர்களை அரசியலமைப்புப்பேரவைக்குப் பரிந்துரைந்துவிட்டு, அப்பெயர்களை பேரவை நிராகரித்ததன் பின்னர், அதனைப் பயன்படுத்தி அரசியலமைப்புப்பேரவை மீது குற்றஞ்சுமத்துவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். அரசியலமைப்புப்பேரவை தமக்குக் கீழ்ப்படிந்து செயற்படவேண்டும் என அரசாங்கம் நினைக்கின்றது. உரியவாறு இயங்கிவரும் கட்டமைப்புக்களை ஸ்தம்பிதமடையச்செய்யும் வகையிலான கட்டமைப்பு மாற்றம் எமக்குத் தேவையில்லை. மாறாக பிழைகளை சீரமைக்கும் வகையிலான கட்டமைப்பு மாற்றமே எமது தேவைப்பாடாகும்' எனவும் அம்பிகா சற்குணநாதன் எடுத்துரைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!