தையிட்டியில் மக்களின் கணிகளை மீட்க அணி திரளுங்கள்! காணிகளை இழந்த மக்கள் அழைப்பு..
வலி வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிடுவதற்கு எதிர்வரும் மூன்றாம் திகதி அனைவரும் அணிதிரளுமாறு தையிட்டி சட்ட விரோத விகாரையால் காணியை இழந்த மக்கள் அழைப்பு விடுத்தனர்.
நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 18 பேருடைய தனியார் காணி. உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட இந்த விகாரைக்கு எதிராக சுமார் 3 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை மேற்கொண்டு வருறுகிறோம்.
மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் எனக் கூறும் இந்த அனுர அரசாங்கம் இந்த காணிகளை விடுவிப்பதில் இரட்டை வேடம் போடுகிறது. நாங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த ஆட்சிக் காலத்திலும் இந்த காணி தனியாருடைய காணி என்பதற்கான சகல ஆதாரங்களையும் சமர்ப்பித்து விடுவிக்குமாறு கோரிய நிலையில் தற்போதைய அமைச்சர் சந்திரசேகரன் உறுதிகளை ஆராய வேண்டும் எனக் கூறுகிறார்.
நீங்கள் எங்களின் உறுதிகளை ஆராயாமல் காணிதர வேண்டாம் எங்கள் உறுதிகள் அனைத்தும் 19 12 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து முறையாக இருந்தமைக்கான பதிவுகள் அனைத்தும் எம்மிடம் திணைக்களங்களிடமும் இருக்கிறது ஆராயுங்கள்.
தற்போது சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு மீண்டும் ஒரு புத்தர் சிலையை கொண்டு வருவதற்கு எதிர்வரும் மூன்றாம் திகதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தையிட்டி போராட்டத்தை விமர்சிக்கும் எம்மவர்களிடம் கேட்க விரும்புவது இந்த போராட்டம் சைக்கிள் கட்சியினுடைய போராட்டம் அல்ல .
நாங்கள் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டமைக்கு எதிராக அனைத்து கட்சியினரிடமும் எமது கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எம்மோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களே முன் வந்தார்கள்.
நாங்கள் யாரையும் குறை கூறுவதற்காக கூறவில்லை எமது போராட்டம் எமக்கானதாக மட்டும் நினைத்து விட வேண்டாம்.