கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற வெடிகுண்டு மிரட்டல் - அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து இலங்கை வந்த விமானம் ஒன்றிற்கு விடுக்கப்பட்ட போலி குண்டு மிரட்டல் காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28.12) அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.44 மணியளவில் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணிகளாக மாறுவேடமிட்டுள்ள நான்கு பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக விமான நிலைய மின்னணு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மின்னஞ்சல் ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதுடன், அதிலிருந்த 245 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாகக் களமிறங்கிய விமானப்படையின் வெடிகுண்டு முறியடிப்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை முழுமையாகச் சோதனை செய்தனர்.
பல மணிநேரத் தீவிர சோதனைக்குப் பின்னர், விமானத்தில் குண்டுகளோ அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்களோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனவும், அது ஒரு போலி மிரட்டல் எனவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபர்கள் குறித்த விசாரணைகளைத் தற்போது புலனாய்வுப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
