தமிழரசுக்கட்சி உறுப்புரிமையிலிருந்து சின்னராசா லோகேஸ்வரன் நீக்கம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கரைத்துறைப்பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி வசமானதை அடுத்து அதன் தவிசாளராக நியமிக்கப்பட்ட சின்னராசா லோகேஸ்வரன், அண்மையில் வேறொரு ஒழுங்கீனப் பிரச்சினை காரணமாக அப்பதிவியிலிருந்து இராஜினாமா செய்தார்.
அதனையடுத்து நடைபெற்ற தவிசாளருக்கான போட்டியில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது. இருப்பினும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தைக் கூட்டிணைந்து தோற்கடிக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தீர்மானித்திருந்தன.
அதற்குரிய அறிவுறுத்தல்கள் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 7 பேருக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் 4 பேருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றை தினம் நடைபெற்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான வரவு, செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான சின்னராசா லோகேஸ்வரன் அதற்கு ஆதரவாக வாக்களித்தமையினால், 11 - 10 என்ற விகிதாசாரத்தில் வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆகையினால் அவரைத் தமது கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அதன் விளைவாக வறிதாக்கப்படும் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.