மரணச் சடங்குகளின் போது வீதிகளில் பட்டாசு கொழுத்த முற்றாக தடை!
வேலணை பிரதேச ஆளுகைக்குள் ஜனவரி முதலாம் திகதிமுதல் மரணச் சடங்குகளின் போது வீதிகளில் பட்டாசு கொழுத்த முற்றாக தடைசெய்யப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு இன்று (26) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இவ்விடையம் குறித்து முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்த தவிசாளர் அதை சபையின் விவாதத்திற்கு விடுத்திருந்தார்.
சபையில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நிலையில் சில உறுப்பினர்கள் ஆலோசனையும் முன்வைத்தனர்.
குறிப்பாக இறந்தவர்களை எரியூட்டும் அல்லது அடக்கம் செய்யும் மயானங்கள் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் இருப்பதால் இறுதிக் கிரியைகளை செய்யும் அனுமதி வழங்கும் போது அதற்கான தடை உத்தரவு அல்லது உறுதியை பெற்று அனுமதிப்பதனூடாக கட்டுப்படுத்தமுடியும்.
அதையும் குறித்த தரப்பினர் மீறும் பட்சத்தில் பாரியளவான தண்டப்பணம் அறவீடு செய்வதற்கும், பற்றுச்சீட்டில் இது தொடர்பான தடை, மீறும் பட்சத்தில் எவ்வகையான தண்டம் அறவிடப்படும் என்ற விபரம் அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் அறிவுறுத்தல் விளம்பரங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.