பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்!

#SriLanka #Jaffna
Mayoorikka
5 hours ago
பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்!

ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், இன்று ஒரு பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

 குறிப்பாக, யாழ் இளைஞர்களிடையே பரவி வரும் சோம்பேறித்தனமும், அதற்குத் தீனி போடும் புலம்பெயர் உறவுகளின் ‘முட்டாள்தனமான’ பண உதவியும் ஒரு தலைமுறையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

 யாழ்ப்பாணத்தின் வீதிகளில் இன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை சாதாரணமாகக் காணலாம். 

ஆனால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் "வேலை இல்லை" என்று புலம்பிக் கொண்டு வெட்டியாகத் திரிவதே யதார்த்தமாக உள்ளது.

 இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் சிங்கள இளைஞர்களும், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் புடவைக்கடைகளில் மலையக இளைஞர் யுவதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் இளைஞர்களோ, படித்து முடித்துவிட்டு எவ்வித இலக்கும் இன்றித் திரிகிறார்கள். ஆட்டோ ஓட்டலாமே? துணிக்கடையில் வேலை செய்யலாமே?" என்று கேட்டால், "அது எங்கள் தகுதிக்குக் குறைவானது" என்ற பதில் வருகிறது. 

வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களின் கௌரவம் பாதிக்கப்படுமாம்! வெளிநாடுகளில் கௌரவம் பார்க்கும் இந்த உறவினர்களில் பலர், அங்குள்ள அரசுகளை ஏமாற்றி, உடல் உழைப்பை வருத்தி, இரவு பகலாகக் கஷ்டப்பட்டுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள். 

 சிலர் மதுக்கடைகளிலும், சிகரெட் விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து, அடுத்தவர் உடல்நலனைச் சீரழிக்கும் தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து இங்கே அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இங்கே கையில் லேட்டஸ்ட் iPhone, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான KTM மோட்டார் சைக்கிள் என ஆடம்பரமாகத் திரியும் இளைஞர்கள், உண்மையில் உழைக்கத் தயங்கும் கோழைகளாகவே இருக்கிறார்கள்.

 உழைக்காமல் கைக்கு வரும் பணம், இயல்பாகவே இளைஞர்களை போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. அதிகப்படியான பணப்புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. 

 வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றாமல், சமூகத்திற்குப் பாரமான 'காவாலிகளாக' மாற்றிக் கொண்டிருக்கிறது. யாழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை, சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள், சிறு வேலைகளைச் சொன்னால் முறைக்கிறார்கள் போன்ற காரணங்களால், யாழ்ப்பாணத்து முதலாளிகளே இன்று பிற மாவட்ட இளைஞர்களையே விரும்புகின்றனர்.

 வெளிநாட்டு உறவினர்களின் இந்த பண உதவி என்பது நிரந்தரமானது அல்ல. இந்தப் பரம்பரையுடன் இது முடிந்துவிடும். அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்கே பணம் சேமிப்பார்களே தவிர, இங்கே இருக்கும் தம்பிக்கோ, மச்சானுக்கோ ஒரு சதம் கூடத் தரமாட்டார்கள். அப்பொழுது, இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யும் வெளிமாவட்ட இளைஞர்கள், யாழ்ப்பாணத்தின் அனைத்து வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறியிருப்பார்கள். 

 இன்று ‘கௌரவம்’ பார்த்த யாழ் இளைஞர்கள், அன்று பிற இனத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அல்லது கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இளைஞர்களே, வேலை என்பது இழிவு அல்ல. உழைக்காமல் உண்பதுதான் பேரிழிவு. 

எந்த வேலையாயினும் அதனை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். புலம்பெயர் உறவுகளே! பணத்தை அனுப்பி உங்கள் உறவுகளைச் சோம்பேறிகளாக மாற்றாதீர்கள். அவர்களுக்குத் தூண்டிலைத் தந்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் , மாறாகத் தினமும் மீனைத் தந்து அவர்களை முடமாக்காதீர்கள்.

 நமது பொருளாதாரம் நமது கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால், வரலாறு நம்மைச் சோம்பேறிகள் என்றுதான் பதிவு செய்யும்.

 - Mukinthan

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!