மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்த அழுத்தம் வழங்குங்கள்! ஜெய்சங்கரிடம் தமிழ்த்தரப்பு

#SriLanka #Election #Province
Mayoorikka
4 hours ago
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்த அழுத்தம் வழங்குங்கள்! ஜெய்சங்கரிடம் தமிழ்த்தரப்பு

வட, கிழக்கு மாகாணங்களில் பேரனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் நடவடிக்கைகளில் தாம் உள்வாங்கப்படவில்லை எனவும், மாகாணசபைகள் இயங்குநிலையில் இருந்திருந்தால், இந்த நிவாரண வழங்கல் செயன்முறைகள் அதனூடாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக கரிசனையை வெளிப்படுத்தி தமிழ்த்தலைவர்கள், இவ்வனர்த்தத்தைக் காரணங்காட்டி மாகாணசபைத்தேர்தல்களை பிற்போடாமல் விரைந்து நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

 அதுமாத்திரமன்றி 'தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுத்தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களையும், நாம் ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, 'பிரஜா சக்தி' எனும் பெயரில் ஏதோவொரு திட்டத்தை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் அது எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவுமில்லை' எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (23) பி.ப 3.00 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்றக்குழுத் தலைவர் சி.சிறிதரன், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்ததுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டிருந்தார்.

 அதன்படி சந்திப்பின் தொடக்கத்தில் 'தித்வா' சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

 எனினும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், மாகாணசபைகள் இயங்குநிலையில் இல்லாததன் காரணமாக தாம் அவற்றில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். 'மாகாணசபைகள் இயங்குநிலையில் இருந்திருந்தால், இந்த நிவாரண வழங்கல் செயன்முறைகள் அதனூடாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுத்தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களையும், நாம் ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, 'பிரஜா சக்தி' எனும் பெயரில் ஏதோவொரு திட்டத்தை முன்னெடுத்துவருகின்றது. 

இருப்பினும் அது எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவுமில்லை' என அவர்கள் கரிசனை வெளியிட்டனர். அதேபோன்று தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். 

அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், 'மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை.

 நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்' என்று வலியுறுத்தினர்.

 அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக பெயர் எதுவாக இருப்பினும், அர்த்தமுள்ள சமஷ்டி தீர்வு உள்வாங்கப்படுவதற்கும், உச்சபட்ச அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதற்கும் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் எனவும் ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் இச்சந்திப்பின்போது பலாலி அபிவிருத்தி குறித்து நீண்டநேரம் பேசப்பட்டது.

 அவ்விமான நிலையத்தை வர்த்தக ரீதியில் வருமானம் ஈட்டும் விமானநிலையமாக மாற்றியமைப்பதற்கு, வெறுமனே ஓடுபாதையை மாத்திரம் அபிவிருத்தி செய்வது போதுமானதன்று எனவும், மாறாக அதனை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். 

அத்தோடு காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி விவகாரத்தில் அரசாங்கத்துக்கு அவசியமான அழுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பமாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

 இச்சந்திப்பின் முடிவில் மாகாணசபைத்தேர்தல்கள் இன்னமும் நடாத்தப்படாமை குறித்தும், அதனை நடாத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியதையும் வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூட்டாகக் கையளிக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!