நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை: இராதாகிருஷ்ணன்
மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை.
அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து வருகிறது. தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.
அதனால் கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட பின்னரே அந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும். வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என தெரிவிக்கிறார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள்.
அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம்.
அது சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது நீங்களாவது செய்யுங்கள். நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில் பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது.
அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால் அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால், இந்த சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும்.
அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
