மீண்டும் அவசரமாக கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை! எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

#SriLanka
Mayoorikka
13 hours ago
மீண்டும் அவசரமாக கூடிய  தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை! எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளைத் தொடர்ந்து, இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்துதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் குறித்த அவசியமான முடிவுகளை எடுப்பதற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (15) மீண்டும் கூடியது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி கூடிய இந்த சபை, திடீர் அனர்த்த நிலைமையுடன் கடந்த நவம்பர் 27ஆம் திகதியும், தற்போது டித்வா புயலுக்கு பிறகும் மீண்டும் கூடியுள்ளது.

 தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான யோசனை இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. 

 புயலின் தாக்கம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட விளக்கினார். நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளளதுடன். 6,164 வீடுகள் முழுமையாகவும் 112,110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் தொடர்பான ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இதனிடையே, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் திட்டத்தில், தாக்கம் ஏற்படக் கூடிய வலயங்களில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மக்களுக்காக 8,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 பல்தரப்பு அணுகுமுறை மூலம் பெருந்தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக வடிகாலமைப்புப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான ஒரு பொறிமுறையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

 அத்துடன், தாக்கம் ஏற்படக் கூடிய மத்திய பிரதேசத்தை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்றை நியமித்தல் மற்றும் அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தகவல்களை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளத்தைத் தயாரித்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 அதேநேரம், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், கிடைத்துள்ள அனைத்து வெளிநாட்டு நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழுவொன்றை நிறுவி அதற்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, இந்த வாரத்திற்குள் நிதியை முழுமையாகச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

 தரவுகளைச் சேகரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், அதற்கான சட்ட கட்டமைப்பின் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதனிடையே, 2016 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட காப்புறுதி முறைமையில், அரசாங்கத்திற்கு 5.79 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். 

 இந்தநிலையில், இந்த காப்புறுதி முறைமையை மீண்டும் ஆரம்பிப்பதாயின், அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும் பயனாளிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய, நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

 இந்த கூட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், ஆளுநர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!