நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது! வடக்கில் ஜனாதிபதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள்,விவசாயம்,மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக்கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 லட்சம் ரூபா நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
