எங்கள் இறப்புகளுக்கு சர்வதேச சமூகம் ஏன் கருத்தில் எடுக்கத் தவறிவிட்டது? தாய்மார் கேள்வி
காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடிவந்த கிட்டத்தட்ட 500 பெற்றோர்களும் உறவினர்களும் பதில்களோ நீதியோ பெறாமல் இறந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை சமீபத்திய 'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது. ஆயினும் எங்கள் இறப்புகளுக்கு, எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை.
இதனை சர்வதேச சமூகம் ஏன் கருத்தில் எடுக்கத் தவறிவிட்டது? என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எமக்கான தேவை குறித்த வெளிப்படுத்தல் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்களும், அன்புக்குரியவர்களுமான நாங்கள், எங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். எங்கள் போராட்டம் பதில்களோ அன்றி நீதியோ இல்லாமல் தொடர்கிறது. எங்கள் அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்று தெரியாமல், வாழ்க்கை தாங்க முடியாத அளவு துயரமாக உள்ளது.
இந்த “சர்வதேச மனித உரிமைகள் தினம்” 1948 டிசம்பர் 10 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு முதல், (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது தொடக்கம்) இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனப்படுகொலையின் மிகவும் கொடூரமான இனப்படுகொலையொன்று முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் மேற்கொள்ளப்பட்டது.
சரணடைந்தவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று பொய்யான வாக்குறுதி அளித்து அதை நம்பி தாமாகவே சரணடைந்த, 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும் உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும், இலங்கை அரசாங்கத்தால், வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள்.
அந்த நாள் முதல், எங்கள் வலி மற்றும் போராட்டம் நின்றபாடில்லை. 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தவரை, இந்த ஆண்டின் மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது. அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் நீதியை வழங்கும் என்று கூறி சர்வதேச சமூகத்திற்கு முன் தன்னை ஒரு மீட்பராக முன்வைக்கிறது.
ஆயினும், ஒவ்வொரு முறையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோப்பை (files) மூடுவதற்கும் முன்னேற்றம் என்ற மாயையை உருவாக்குவதற்கும் செயல்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்கு வழிகளை அறிமுகப்படுத்துகின்றனர். சர்வதேச ஆதரவுடன், நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்..
தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தேடும், கிட்டத்தட்ட 500 பெற்றோர்களும் உறவினர்களும் பதில்களோ நீதியோ பெறாமல் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சமீபத்திய “டித்வா” சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது.
ஆயினும் எங்கள் இறப்புகளுக்கு, எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை. எந்த நாடும் உதவிக்கும் வரவில்லை. இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் ஏன் கருத்தில் எடுக்கத் தவறிவிட்டது? இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து, ஒரு சமரச அணுகுமுறையை பரிசீலித்து வரும் நாடுகளுக்கு, நாங்கள் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்: இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் உள்ளது, ஆயினும் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ஏற்கனவே சரிந்துள்ள நாட்டின் பொருளாதாரம் சூறாவளியால் (டித்வா புயல்) மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எங்கள் விடயத்தை விட அக்கறை கூடிய பல வேலைகள் உள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாரத்திற்கு வர இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கும் வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியாக இருந்தாலும், எமக்கான நீதியை வழங்கத் தயாராகவோ அல்லது எதிர்ப்புகளை மீறி செய்யக் கூடிய திறனுடையவராகவோ இருக்க மாட்டார்.
எனவே, எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை மூலமே வர வேண்டும், அதுவும் காலதாமதமின்றி வர வேண்டும். எனவே, நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம்:
இனப்படுகொலை, சர்வதேச குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
