விஜய்யின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர்.
அவர்களை பொலிஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ.ஆர். கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
அப்போது அவர் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதை காட்டினார். ஆனால், பொலிஸார் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எப். படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
சிவகங்கை கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார். டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது. இதன் பிறகே புதுச்சேரி பொலிஸார் நிம்மதியடைந்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
