யாழில் தீவிரமாக பரவும் எலிக் காய்ச்சல்: வெள்ளதில் செல்பவர்கள் அதிக கவனம் எடுக்கவும்
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன.
யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்குப் பின்னரே இந்த நோய்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் நோயானது ஒரு வகை பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது.
எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ளநீர், வயல்நீர், சேற்று நிலங்களில் இக்கிருமிகள் சென்றடைகின்றன.
மனிதர்கள் வெள்ளநீரில், வயல் நிலங்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலில் உட்செல்கின்றன.
இந்நோய் ஏற்படும் போது கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இதனால் மனித உடலில் சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தும்.
இந்நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது.
இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும்.
வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும். வெள்ளநீரில் அவசியமின்றி விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வயல்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக முதல் இரண்டு நாட்களுக்குள்ளேயே தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தாமதமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதனாலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
எனவே, பொது மக்கள் அனைவரும் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
