தொல்பொருள் திணைக்களத்துக்கான ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ள கூட்டமைப்பு!
புத்தசாசன, சமய, கலாசார அமைச்சுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒதுக்கீடு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் விவாதத்தின்போது தமது வலுவான எதிர்ப்பையும் கரிசனைகளையும் பதிவுசெய்யவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வமைச்சின்கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கான ஒதுக்கீடு தொடர்பில் வாக்கெடுப்பைக்கோரி, அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள், இந்துக்களின் வழிபாட்டு இடங்கள் என்பன தொல்பொருள் திணைக்களத்தினால் முறையற்ற விதத்தில் கைப்பற்றப்படல் மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பௌத்த சின்னங்கள் நிறுவப்படல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகிவருகின்றன.

அண்மையில் திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் பெயர்ப்பலகைகள் இடப்பட்ட விவகாரம் என்பன பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆராய்ந்துவருகின்றது.
அதற்கமைய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் புத்தசாசன, சமய, கலாசார அமைச்சுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒதுக்கீடு தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (1) நடைபெறவுள்ளது.
இவ்விவாதத்தின் முடிவில் புத்தசாசன, சமய, கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கான ஒதுக்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாக்கெடுப்பைக் கோரவுள்ளார்.
அதுமாத்திரமன்றி மேற்படி விவாதத்தின்போது தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் தமது கரிசனைகளையும், எதிர்ப்பையும் தெளிவாகப் பதிவுசெய்யவிருப்பதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கான ஒதுக்கீடு தொடர்பான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கவுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
