இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்தில் அரசாங்கம் நொண்டிசாட்டுகளை கூற வேண்டாம்! கஜேந்திரகுமார்
இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையாக கதைக்க வேண்டும். இந்த விடயத்தில் இராஜதந்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மறைந்திருக்க கூடாது.
என்ற பெயரில் இந்தியாவுக்கும் தமிழருக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும் கோணத்தில் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் செயற்பட்டதை போன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகிறது. முடியாவிடின் கூறுங்கள் நாங்கள் இந்தியாவுடன் கதைக்கின்றோம்.
நொண்டிசாட்டுகளை கூற வேண்டாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கை கடற்பரப்பில் மூன்றில் இரண்டை கொண்ட பிரதேசமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் காணப்படுகின்றன.
அந்த பிரதேசம் போர் நடைபெற்ற காலத்தில் போர் நிறுத்தம் இருந்த ஒரு சில வருடங்களை தவிர்ந்த மற்றைய வருடங்கள் முழுவதும் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சூழலே.
இப்போது போர் முடிவடைந்து 16 வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த 16 வருடங்களில் வட மற்றும் கிழக்கில் கடற்றொழிலை ஊக்குவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதுவுமே கிடையாது. யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மையே.
ஆனால் நாட்டில் உள்ள மீனவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மீனவர்கள் நெடுந்தூர மீன்பிடி படகு போன்றவை தொடர்பில் கற்பனை செய்யவும் முடியாது. அவர்கள் சிறிய மீன்பிடி துறையிலேயே ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் மயிலிட்டியில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் அது அங்குள்ள மக்களுக்காக பயன்படுத்தக்கூடியதாக இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களை தொடர்ச்சியாக பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதற்கும், தெற்கு மற்றும் வெளியில் உள்ளவர்கள் அங்கு வருவதற்கே அது உதவியாக இருக்கும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழிந்தும் இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலைமை மயிலிட்டியில் இருக்கும் நிலையில், வேறு வேறு மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்தியடையப்போகின்றது என்பது அந்த மக்களுக்கு எந்தளவுக்கு ஆபத்தாக அமையப் போகின்றது என்பதனை அமைச்சர் சிந்திக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது. அவ்வகையான அபிவிருத்தி திட்டங்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு முதலாவது உதவுவதாகவே இருக்க வேண்டும்.
ஆனால் அங்குள்ள மக்களுக்கு கடைசி நிலையும், வெளியில் இருந்து வருபவர்களுக்கே முதல் நிலை என்றும் இருக்குமாக இருந்தால் இதற்கு உடந்தையாக இருக்க முடியாது. மீன்பிடி அமைச்சர் இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புகின்றேன்.
இப்போது இந்தியாவின் மடிவலை தொடர்பான பிரச்சினையில் தற்போது கனிசமான அளவுக்கு முன்னேற்றம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அப்படியில்லை.உண்மையில் ஆயிரக்கணக்கில் வருகின்ற போது அவற்றில் கொஞ்சத்தை பிடிப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அமைச்சரான உங்களின் தலையீட்டில் உங்களின் அழுத்தத்தில் இதனை அரசாங்கம் இராஜதந்திர கோணத்தில் பார்க்கக்கூடாது.
இதில் எந்த இராஜதந்திரமும் கிடையாது. உண்மையை நாங்கள் இந்தியாவுக்கு கூற வேண்டும். குறிப்பாக மீன்பிடி துறை என்பது இலங்கையில் தமிழருக்குதான் பொருத்தமானது. மூன்றில் இரண்டு கடற்பரப்பு வடக்கு, கிழக்கையே சாரும்.
இதன்படி தமிழர்களே மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். 30 வருட போரால் பின்னடைவில் இருக்கின்ற இனம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தை அரசாங்கம் வெளிப்படையாக கதைக்க வேண்டும்.
இந்த விடயத்தில் இராஜதந்திரம் என கூறிக்கொண்டு மறைந்து கொண்டிருக்கக்கூடாது. இராஜதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கும் தமிழருக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும் கோணத்தில் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் செயற்பட்டதை போன்றே நீங்களும் செயற்படுகின்றீர்கள். அப்படியென்றால் கூறுங்கள் நாங்கள் இந்தியாவுடன் கதைக்கின்றோம்.
எவ்வாறாயினும் அரசாங்கமாக இருந்துகொண்டு நீங்கள் இவ்வாறு நொண்டி சாட்டுகளை கூறக்கூடாது. மீன்பிடி துறையில் இதற்கு முன்னர் இருந்த அமைச்சர் ஊழலில் ஊறிப்போயிருந்தார். அவர்களுக்கு தெரிந்தவர்கள்.
அவர்களுக்கு இலஞ்சம் கொடுப்பவர்களுக்கும் கடலட்டை வியாபாரத்தை ஒதுக்கினார். கடற்றொழிலுடன் தொடர்பில்லாதவர்களுக்கு கணிசமான அளவு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலேயே அந்த இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் எந்த மாற்றமும் காணவில்லை. அவ்வாறான விடயங்களை அந்த மக்களுக்கு நன்மையான வகையிலேயே ஒப்படைக்க வேண்டும். ஆனால் இது முழுக்க முழுக்க வியாபார கோணத்திலும் ஊழல் கோணத்திலுமே நடந்தது என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
