போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம்!
கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம். விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு என்பது ஆய்வுகளில் இனங்காணப்பட்ட விடயம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக்கான மைதான வசதிகள் பெரியளவில் இல்லை.
மழை காலத்தில் அது பெரிய சிரமத்தை ஏற்படுத்துவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற வீரர் வியாஸ்காந் இலங்கை தேசிய அணியில் விளையாடுகிறார். இதுவொரு நல்ல தருணம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளக விளையாட்டு மைதானத்தில் ஒரு நாள் பயிற்சி பெற ஒரு இலட்சம் ரூபாய் கட்ட வேண்டும். போதிய வசதிகள், உதவிகள் விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை.
இதற்கு முடிவு கட்ட பெருமளவு விளையாட்டுகளை விளையாடக் கூடிய வசதி கொண்ட உள்ளக விளையாட்டு மைதானத்திற்கு விளையாட்டு துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
2026 ஓகஸ்ட் 31, மழை காலம் ஆரம்பிக்க முன் உள்ளக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இங்கு நடைபெறும் முதல் போட்டிக்கு நான் வருவேன் - என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
