இலங்கையில் பொது இடத்தில் கடவுள் சிலையை முன் அனுமதியின்றி நிறுவ முடியுமா? - சட்ட ஆலோசனை
இலங்கையில் பொது இடங்களில் (வீதியோரங்கள், சந்திகள், கடற்கரைகள், பூங்காக்கள்) போன்றவற்றில் அனுமதியின்றி ஒரு கடவுளின் சிலையை நிறுவுவது சட்டப்படி சாத்தியமா? இது மத உணர்வுகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் இடையில் சிக்கிய ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை ஆகும். இலங்கையின் சட்ட ஏற்பாடுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை விரிவாக ஆராய்வோம்!
1. சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை நிறுவுவதற்கான சட்டம் : No. 4 of 1975 சட்டம் வரையறுக்கின்றது.
இலங்கையில் பொது இடங்கள் மற்றும் அரசகாணிகளில் சிலைகள், தூண்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் (Monuments) நிறுவுவதைக் கட்டுப்படுத்தும் பிரதான சட்டம் ஆகும். "வீதிகளுக்குப் பெயரிடுதல் மற்றும் நினைவுச் சின்னங்கள் நிறுவுதலைக் கட்டுப்படுத்தும் சட்டம், இல. 4 இன் 1975" என்பதாகும்.
சட்டத்தின் முக்கிய பிரிவுகள் :
பிரிவு 7 (Section 7): அத்தியாவசியமான முன் அனுமதி பற்றி தெளிவாக கூறுகின்றது.
அரசுக்குச் சொந்தமான நிலத்திலோ அல்லது ஒரு உள்ளூராட்சி அதிகார சபைக்குச் சொந்தமான நிலத்திலோ (மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம்) அமைச்சரின் முன் அனுமதி (Prior Approval of the Minister) இன்றி யாரும் எந்தவொரு நினைவுச் சின்னத்தையும் நிறுவக் கூடாது.
இதன் விளக்கம் என்னவென்றால் உங்கள் தனிப்பட்ட காணிக்குள் சிலை வைப்பது பற்றி இங்கு பேசப்படவில்லை. ஆனால், வீதியோரங்கள், பொதுச்சந்திகள், போக்குவரத்து வீதிகள் ஆகியவை உள்ளூராட்சி சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுச் சொத்துக்கள். எனவே, கடவுள் சிலையை நிறுவும் முன், உள்ளூராட்சி மன்றத்திற்கு பொறுப்பான அமைச்சரின் எழுத்து மூலமான முன் அனுமதி கட்டாயம்.
"நினைவுச் சின்னம்" (Monument) என்பதன் வரையறை : சட்டத்தில் "நினைவுச் சின்னம்" என்பது ஒரு நபரின் அல்லது நிகழ்வின் நினைவாக அமைக்கப்படும் அமைப்பாகக் குறிப்பிடப்பட்டாலும், கடவுளின் சிலை ஒரு நிரந்தரமான, மதச் சின்னமாகக் கருதப்பட்டு, பொதுப் பயன்பாட்டைப் பாதிக்கும் பட்சத்தில், சட்டத்தின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்படும்.
2. அனுமதியின்றி வைக்கப்பட்டால் என்ன நடக்கும்? - அகற்றும் அதிகாரம்!
சட்ட ஏற்பாடுகளை மீறி, உரிய அனுமதியின்றி ஒரு சிலை நிறுவப்பட்டால், அதனை அகற்றுவதற்கான அதிகாரம் உள்ளூராட்சி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), வீதி அபிவிருத்தி திணைக்களம் (RDD) மற்றும் சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறையினருக்கும் உள்ளது.
உள்ளூராட்சி சபையின் அதிகாரம் :
உள்ளூராட்சிச் சட்டங்களின் கீழ், பொது இடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அபாயத்தை ஏற்படுத்தும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தையும் அகற்றும் அதிகாரம் உள்ளூராட்சி சபைக்கு உண்டு. சில சமயங்களில், மேற்படி கட்டுமானங்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள குறித்த சபையினர் பொலிஸ் உதவியையும் நாடலாம்.
பொலிஸ் தலையீடு:
அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய அல்லது போக்குவரத்து, பொது ஒழுங்கிற்குத் தடையாக உள்ள எந்தவொரு செயலிலும் பொலிஸ் (Police) தலையிட முடியும். ஒரு சிலை மத அல்லது சமூகப் பதற்றத்தை உருவாக்கினால், அமைதியைப் பேணுவதற்காகக் பொலிஸ் துறையினர் சில வேளைகளில் தலையிடலாம்.
3. சமூக மற்றும் சட்டரீதியான தாக்கங்கள்
A. சமூக நல்லிணக்கப் பிரச்சினை :
இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகம். அனுமதியின்றி ஒரு குறிப்பிட்ட மதத்தின் சிலை பொது இடத்தில் நிறுவப்படுவது, மற்ற மத சமூகங்களிடையே பாரபட்ச உணர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை நேரடியாகப் பாதிக்கும். இதனால் அமைதி சீர்குலைந்து, வன்முறைச் சம்பவங்கள் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
B. 'நீதிமன்றத் தீர்ப்புகளின்' நிலை :
இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள், பொது இடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், மதச் சின்னங்களை நிறுவுவதற்குச் சட்ட விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சட்டத்தை மதித்து அனுமதி பெறுவது அடிப்படைத் தேவையாக உள்ளது.
மத நம்பிக்கையைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. ஆனால், அந்த நம்பிக்கை பொதுச் சொத்துரிமையின் சட்ட விதிகளை மீறவோ அல்லது சமூகத்தில் உள்ள மற்ற குடிமக்களின் உரிமைகளுக்குத் தடையாகவோ இருக்கக் கூடாது.
மிகச்சரியான வழி: உங்கள் கிராமத்தில் ஒரு சிலை வைக்க விரும்பினால், முதலில் உங்கள் பிரதேச சபை/மாநகர சபை உடன் பேசி, உள்ளூராட்சித் துறைக்கு பொறுப்பான அமைச்சரின் எழுத்துபூர்வ அனுமதியைப் பெறுவதே பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான வழி!
மிக முக்கியமான விடயம் : மேற்படி சட்டம் மிகத்தெளிவாக சொல்லும் விடயம் ஏதேனும் ஒரு சமய அமைப்பு (பௌத்த, இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ, ஏனைய) சமூக அமைப்பு, தனிநபர் தமது தனிப்பட்ட மற்றும் சொந்த ஆதனத்தினுள் (உ+ம் : தனியார் காணி, ஆலயங்கள், அமைப்புக்களின் காணிகள்) குறித்த அமைப்பு அல்லது தனிநபர் தமது சொந்த தேவைகருதி சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நிறுவுதல் தொடர்பில் முன்னனுமதி பெறப்படல் வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
ஆனால் எது எவ்வாறிருப்பினும் ஏதேனும் ஒரு தனிநபரின் அல்லது அமைப்புக்களின் ஏதேனும் நடவடிக்கைகள் பொது அமைதி, இனமத நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அல்லது அச்சுறுத்தலாக அமைந்தால் சம்பந்தப்பட்ட துறை பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
(வீடியோ இங்கே )