இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த விஜித ஹேரத்!
இலங்கையில் சுற்றுலாத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், திரைப்படத் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காகவும் வருகை தருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்தார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், சமீபத்திய வருடங்களில், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.
வலுவான விமானத் தொடர்புகள் மற்றும் கலாசாரப் பிணைப்புகள் மூலம், எமது இரு நாடுகளும் இயற்கையாகவே சுற்றுலாப் பங்காளிகளாக உள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலானது, சுற்றுலா ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதில் எமக்குள்ள கூட்டு ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது.
சுற்றுலாத்துறையானது இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு மையப் புள்ளியாகும். இவ்வாரத்தில், எமது நாட்டுக்கு வருகை தந்த 2 மில்லியனாவது சுற்றுலாப் பயணியை நாம் வரவேற்றோம். அத்துடன் இவ்வருட இறுதிக்குள் 2.4 தொடக்கம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கிறோம். இது எமது சுற்றுலாத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.
2030 ஆம் ஆண்டளவில், 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தையும் நாம் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த இலக்கை அடைவதற்கு, இலங்கை நிலைபேறான தன்மை, சந்தை பல்வகைப்படுத்தல், வலுவான விமானத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
மேலும், "சுற்றுலாத் துறையின் எதிர்காலம் பற்றிய ரியாத் பிரகடனத்திற்கு" அமைய, தேசிய சுற்றுலாத் திட்டமிடலில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கருவிகளை இணைத்தல் உள்ளிட்ட பூகோளப் போக்குகளை உள்வாங்கவும் நாம் தயாராக உள்ளோம். சமீபகாலமாக இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமைக்கு, இலவச விசா வசதி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டங்களே காரணமாக அமைந்தன.
அதற்கமைய, இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான 'குறுகிய தூரப் பயணங்களில்' மிகச் சிறந்த ஒரு இடமாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் நகரச் சுற்றுலா, கடற்கரைகள், மரபுரிமைச் சுற்றுலா, MICE சுற்றுலா (மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்), திருமணச் சுற்றுலா, திரைப்படச் சுற்றுலா மற்றும் கிரிக்கெட் சுற்றுலா போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்திய நகரங்கள் முழுவதும் நாம் முன்னெடுத்த வீதிச் சாகசப் பயணங்கள், B2B செயற்பாடுகள் மற்றும் விமானச் சேவைப் பங்காண்மைகள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. எமது 2,500 வருடகாலத் தொடர்பைக் கருத்தில் கொள்ளும்போது, பௌத்த யாத்திரைகள் மற்றும் இராமாயணப் பாதைகள் உள்ளிட்ட மதச் சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளதை அடையாளம் காண முடிகிறது.
அதற்கமைய, விருந்தோம்பல் செயற்திட்டங்களை ஆரம்பிக்கவும், விழாக்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புகளுக்காக இலங்கைக்கு மேலும் வருகை தருமாறும் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் முதலீட்டாளர்களையும் நாம் ஊக்குவிக்கிறோம்.
நாம் ஒன்றிணைந்து செயற்படும்போது இலங்கை - இந்திய ஒத்துழைப்பு மேலும் பலவடையும். அதற்கமைய இன்று நடத்தப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கவும், சுற்றுலாத் துறையில் எமது பங்காண்மையைத் தீவிரப்படுத்தவும் காரணமாக அமையும் என நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
