விடுதலைப் புலிகள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்தனர்! பாராளுமன்றத்தில் பிமல் ரத்நாயக்க
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் பொலிஸாரும், இராணுவத்தினருமே ஈடுபடுவதாக கஜேந்திரகுமார் கூறினார். ஆனால் வடக்கிலேயே அதிகளவானோர் கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்டு இதுபற்றி கூறுகின்றனர். போதைப்பொருளை ஒழிக்க இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். வடக்கை போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். கஜேந்திரகுமார் போன்றவர்கள் தேசிய ஒற்றுமைக்கு பயப்படுகின்றார்கள்.
அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் இனவாதத்திலேயே தங்கியுள்ளது. முன்னர் தெற்கில் உள்ள இனவாதம் பலமாக இருந்தமையினால் அவர்களின் இனவாதம் தெரியவில்லை. எமது அரசாங்கம் இனவாதத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் வடக்கில் முற்றுமுழுதாக இனவாதம் மற்றும் சாதி பேதம் என்பன இருக்கின்றன.
வடக்கே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, கேரள கஞ்சாவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் குறைவாக இருந்ததாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். ஏன் அவ்வாறு குறைவாக இருந்தது என்றால் யுத்த காலத்தில் இந்தியாவில் இருந்து படகில் அவை கொண்டுவரப்படவில்லை.
யுத்த காலத்தில் இந்திய படகுகள் வரவில்லை. இதனாலேயே அப்போது போதைப் பொருட்களை கொண்டுவரவில்லை. எவ்வாறாயினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சிலர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர்களின் இயக்க நடவடிக்கைகளுக்காக அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். திருகோணமலை சம்பவத்தை தூண்டி விட்டு அதிலும் இவர்கள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
