பொலிஸாரின் கன்னத்தில் அறைந்த பிக்கு - திருகோணமலையில் பதற்றம் (வீடியோ இணைப்பு)
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்;டுள்ளது.
குறித்த புத்தர்சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவிற்கமைய இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பேஸ்புக் பதிவில் குறித்த காணொளியை வெளியிட்டு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,
இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது. நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர். மக்கள் சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர்.
எனினும், அங்கிருந்து கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவுகள், ஒரு பொலிஸ் அதிகாரி போல தோன்றும் ஒருவர், சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக பிக்குவிடம் பணிகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதை காட்டுகிறது.
ஆனால் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம், பொலிஸார் தங்கள் கடமையை செய்யாததை பற்றி நான் நேற்று இரவு தெரிவித்தேன்.
யாரும் சட்டத்திற்கு மேலானவரல்ல என்று கூறும் ஜேவிபியின் வாக்குறுதி, பௌத்த பிக்குகள் தொடர்பாக வரும்போது செயல்படுத்தப்படாததாகத் தோன்றுகிறது என்றும் கூறினேன். இதனை தொடர்ந்து சிலை அகற்றப்பட்டுள்ளது, மேலும் சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானமும் அகற்றப்படும் என்று நம்புகிறேன்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அரசு செயற்படுவதையொட்டி அவர் அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடவும் அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
