நாட்டின் சட்ட விதிமுறைகளை தரப்படுத்தியுள்ளோம்! ஜனாதிபதி
முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஊகிக்கக்கூடிய பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை எதிர்பார்த்த மட்டத்தை விட அதிகரிக்க தற்போது முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுடன் ஒன்றிணைந்த தரப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை கட்டியெழுப்பியுள்ளது. ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் நாட்டின் சட்ட விதிமுறைகளையும் தரப்படுத்தியுள்ளோம்.
அன்று ஆட்சியை கையகப்படுத்துவதற்காக போராடினோம் இன்று இந்த நாட்டிற்கு வெற்றியை பெற்று தருவதற்காக போராடி வருகிறோம். இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஒப்பிட்டு பேசுவதை ஒரு சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும் ஏனைய அரசாங்கத்தை போல நாம் ஒருபோதும் இல்லை.
பழய அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வருமாயின் அதை போன்றதொரு அரசாங்கத்துடன் நன்மை தீமைகளை ஒப்பிட்டு பேசலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுடன் ஒன்றிணைந்த தரப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை கட்டியெழுப்பியுள்ளது.
அப்போதைய நோக்கமும் தற்போதைய நோக்கமும் அபிலாசையும் மாத்திரமே மாறியுள்ளது. மக்களால் வழங்கப்பட்ட பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, அவர்களை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் ஆட்சி செய்யக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் செயல்படுகிறோம். உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு தன்னிச்சையான முடிவுகளை நாம் எடுப்பதில்லை.
அரசாங்கத்தின் உண்மையான பலம் பொதுமக்களே, இறுதி மூச்சுவரை நாட்டின் நிலையான மாற்றத்துக்காக சளைக்காமல் போராடுவோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என கூறினார்கள்.
பின்னர் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியை கொண்டு நடத்த தரமான ஆட்சியர் இல்லை என வதந்திகளை பரப்பினார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி மக்களின் ஆதரவுடன் ஒன்றிணைந்து வெற்றிகரமாக செயல்படுகிறது என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
