போதைப்பொருள் கடத்தலில் படையினருக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு உண்டு: பாராளுமன்றில் கஜேந்திரகுமார்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புற்றுநோயாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் கடத்தலுக்கு படையினருக்கும் தொடர்புண்டு என்ற விடயத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தலில் படையினருக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதாகத் தாம் நேற்று கூறிய கருத்தை, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மறுதளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
எனினும், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சந்திரசேகர், தமது கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் அரசாங்கம், யதார்த்த நிலையை ஏற்றுக் கொண்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.
அதனைவிடுத்து, ஆதாரங்களைக் கோரி தங்களை முட்டாள்களாகக் காட்டுவதற்கு முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது, வடக்கில் படையினரின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் படையினருக்கு தெரியாமல் போதைப்பொருள் கடத்துவதென்பது முடியாத விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தெற்கில் உரிய முறையில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமையே, பாரதூரமான சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்தது என கூறியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புற்றுநோயாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கு வெள்ளையடிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
