வட மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவர்கள்!
பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு பண்ணையிலுள்ள சுகாதாரக் கிராமத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.11.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள்.
நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது.
நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட வாழ்த்துகிறேன், என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
