மனுநீதி கண்ட சோழனுக்கு உதாரணம் நீதிபதி இளஞ்செழியன்!
புராணங்களிலே எப்படி நீதி வழுவாமல் ஆட்சி செய்தற்கு உதாரணமாக மனுநீதிச் சோழன் கதையைத்தான் கூறுவார்கள்.
அவ்வாறுதான் இலங்கையில் நீதி, நேர்மை இரண்டிலும் சிறந்து அந்தச் சோழ மன்னனைப் போல் ஒருவர் சிறந்து விளங்கினார். அவர்தான் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன்.
ஆம், யாரிந்த இளஞ்செழியன், இலங்கையில் முப்பது வருடங்களிற்கு மேல் நடந்த போரில் நீதித்துறை முடங்கியிருந்தது என்பது யாவரும் அறிந்த விடையம். நேர்மையான துணிகரமான கடுமையான தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்குவது என்பது மிகவும் அரிதாக இருந்த காலப்ப்பகுதி.
இந்தநிலையில் தான் அதையெல்லாம் தகர்த்தெறிந்து மிகவும் துணிகரமாகவும், நேர்மையாகவும் தீர்ப்பு வழங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒருவர் தான் நீதிபதி இளஞ்செழியன். மிகவும் குறைந்த வயதில் இந்நாட்டிலே நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் இளஞ்செழியன் அவர்கள்.
அவருடைய வாழ்வின் ஒரே நோக்கம் நீதியைப் பாதுகாக்கின்றமையே அன்றி வேறில்லை.
இதனடிப்படையில் வித்தியா வல்லுறவு கொலைவழக்கில் அவர் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பும் வேள்விக்கடாயை அவர் தடைசெய்ததும் மிக பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
வெறும் சொற்ப காலங்கள் மட்டுமே யாழ் மேல்நீதிமன்ற நீதியரசராகப் பணியாற்றிய இளஞ்செழியன் அவர்கள் யாழ் மண்ணுடன் மிக நெருக்கமாக பல்வேறு காரணங்கள் இருந்தன.
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ட்ரயல் அட்பார் விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தமை வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்க கடும் சட்டங்களை கொண்டுவந்தமை நகரை உலுக்கிய பரந்துபட்ட கஞ்சாப் பயன்பாடு பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் முதல் குற்றவாளிகள் பெற்றோர் எனத் துணிச்சலுடன் அடையாளப்படுத்தப்பட்டமை விசாரணைகளை வெறும் சாட்சியங்களோடு மட்டும் நோக்காது மனிதநேயத்துடன் நோக்கியமை நீதியை நிலைநிறுத்த பணபலமும் அரசியல் செல்வாக்கும் தேவையில்லை என்று நிரூபிக்கப்பட்டமை பொது மேடைகளில் நகைச்சுவையாகப் பேசிச் சபையை கலகலப்பாகப் பேணும் வல்லமை என்று பலவற்றைச் சொல்லலாம்.
நீதிக்கு சாட்சிகளும் ஆதாரங்களும் மட்டுமே தேவை என்ற பொதுவான கோட்பாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியிலும் வழக்குகளை நோக்குவதில் சிறந்தவரென இந்நீதியரசரின் பெருமைகள் சர்வதேச ரீதியில் இன்றுவரை பேசப்படுகின்றன.
வவுனியா மாவட்ட நீதிபதியாக இவர் இருந்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவரைப் பிடித்து சிறையில் தள்ளாது, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஊடாகக் கலந்துரையாடி சுயதொழில் செய்து பிழைப்பதற்காக ஆடுகள் பெற்றுக் கொடுத்த சம்பவம் மிகப் பெருமெடுப்பில் ஊடகங்களில் பாராட்டபட்டமை மனிதாபிமானம் நிறைந்த நீதித்துறைக்கோர் சான்றாக அன்று அமைந்தது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுத் தண்டப் பணம் செலுத்தப் பணிக்கப்பட்ட சில ஏழைக் குற்றவாளிகளின் தண்டப் பணத்தைத் தானே செலுத்திய சம்பவங்களும் இளஞ்செழியன் அவர்களின் வரலாற்றில் உண்டு.
தன்னுடைய ஓய்வு நேரங்களில் சட்டம், நீதி பற்றி அறிவு குறைந்த பாமர மக்களின் கடிதங்களையும் கவனமாகப் படித்துத் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் ஒருவராகவும் இவர் இருந்திருக்கிறார்.
நீதிகளை வழங்கும் ஒருவருக்கு இதயம் கல்லினால் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அவர் வழங்கும் தீர்ப்புகளும் பக்கச்சார்பின்றி சரியானதாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இவரின் வாழ்க்கைத் தத்துவங்களோ முற்றிலும் வேறுபாடானவை என்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரில் நிகழ்ந்த இவரின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் ஹேமச்சந்திரவின் மரணமே சான்று.
தன்னுடைய பதவி, புகழ் என்று சகலதையும் புறந்தள்ளி தன்னுயிரைக் காத்து மரணத்தைத் தழுவிக்கொண்ட ஒரு மெய்ப்பாதுகாவலருக்காய் கதறியழுத ஒருவரின் வரலாறு எங்கும் எதிலும் இதுவரை வந்ததில்லை.
ஏதோ தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுபோல இறந்தவரின் மனைவியைக் கையெடுத்துக் கும்பிட்ட கைகளை யாழ்ப்பாணம் இன்றுவரை மறந்திருக்காது. “மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ் வந்தேன்.
இரண்டுபேருடன் மட்டும் திரும்புகிறேன்” என்று யாழ்நகரை விட்டு மாற்றலாகிச் சென்றபோது பிரிவுபசார நிகழ்வில் அவர் ஆற்றிய நெகிழ்ச்சியான உரைக்கு அன்றைய ஊடகங்கள் வெகுவாக முக்கியத்துவம் கொடுத்திருந்தன.
நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் தமிழினத்தின் சாபக்கேடு நீதிபதி இளஞ்செழியனையையும் விட்டு வைக்கவில்லை. அவரது பதவி சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் அவரது ஓய்வுக் காலம் முடிவடைய முன்னரேயே பறிக்கப்பட்டது.
நீதியின் கோபுரம் திட்டமிட்டு தகர்க்கப்பட்டது.
"நான் விரும்பவில்லை; கட்டாயப்படுத்தப்பட்டேன்" என அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் நீதியின் கோபுரம் இளஞ்செழியன் நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தமையை யாரும் மறக்க முடியாது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
