யாழ்ப்பாணத்தில் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வு!
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்று (05) புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டு கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
உலகளாவிய ஒருங்கிணைந்த சுனாமி அநர்த்த வெளியேற்றுகை ஒத்திகை நிகழ்வு இலங்கை உட்பட 28 நாடுகளில் கரையோர மாவட்டங்களில் இன்று (05) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மாத்தறை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/401 பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது.
இதன்போது ஏற்கனவே கிராமசேவை உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் யா/ மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் ஆகிய இரு பகுதியினரையும் பாதுகாப்பாக வெளியேற்றி யா /வட இந்து மகளிர் கல்லுரியில் தங்க வைக்கப்பட்டு வெளியேற்று ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அவசரகால வெளியேற்ற பாதையூடாக பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் பருத்தித்துறை பிரதசெயலாளக மேற்பார்வையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவத்தினர், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர். முதலுதவி செயற்பாடுகளில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம், கியூமெடிகா, சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ், மாவட்ட மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், 119 அவசர சேவையினர் ஈடுபட்டிருந்தனர்.
காயப்பாதிப்புகளுக்கு உளபிரயோரை மீட்கப்பட்டு அவசர நோயாளர் காவு வாகனங்களின் மூலம் முதலுதவி நிலையங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்கும் ஒத்திகை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன், மாவட்ட அநர்த்த முகாமைத்துவ பிரிவு பொறுப்பதிகாரி சூரியகுமர், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், உப தவிசாளர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரயந்த அமரசிங்க, பருத்தித்துறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, கடற்படை மற்றும் விமானப்படை பொறுப்பதிகாரிகள், பருத்தித்துறை பிரதேச செயல உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் ஆயிரம் பேர்வரை இந்த ஒத்திகை நிகழ்வில் இணைக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
