உறுதி காணிக்கு பின்னுரித்து (Nominee) நிறைவேற்றலாமா? - சட்ட ஆலோசனை
உறுதி காணி (Deed Land) என்றால் என்ன?
உறுதி காணி என்பது முழுமையான தனியுரிமை (Absolute Ownership) உடைய காணி. அதாவது, நீங்கள் அதை வாங்கிய பிறகு, உங்கள் பெயரில் உறுதி (Deed) பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த உறுதியின் படி உறுதி உடையவர் முழு உரிமை மற்றும் உடமையாளர் ஆக கருதப்படுகின்றார்.
பின்னுரித்து (Legal Nominee) என்றால் என்ன?
பின்னுரித்து (Nominee) என்பது பொதுவாக LDO Grant / Permit, Bank Account, Insurance, EPF/ETF போன்ற இடங்களில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் சட்ட முறை. இது உரிமையாளர் இறந்த பிறகு தற்காலிக நபராக அசையும் அல்லது அசையாச் சொத்தைப் பராமரிக்க நியமிக்கப்படுபவர். ஆனால் அவர் சட்ட வாரிசு அல்ல.
உறுதி காணிக்கு பின்னுரித்து செய்ய முடியுமா?
இல்லை என்பது தான் ஒரே பதில். உறுதி காணி என்றால் அது முழுமையான தனியுரிமை உடைய சொத்து என்பதால், Nominee எழுதுவதற்கு சட்டரீதியான ஏற்பாடு கிடையாது அவ்வாறு பின்னுரித்து நிறைவேற்றப்பட்டால் அது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது.
சட்டப்படி உறுதிக் காணியினை மரணசாசனம் அல்லது இறுதி விருப்பாவணம் (Will) மூலம் அல்லது Gift / Transfer Deed மூலமாக மட்டுமே
மற்றொருவருக்கு உரிமை மாற்றப்படலாம்.
சமூக வழக்கத்தில் பின்னுரித்து வைத்து உறுதிக்காணியை நன்கொடை கொடுத்தல் என்று பலரும் பயன்படுத்திக் கொள்ளும் பேச்சுவழக்கு முறையானது தங்களுக்குரிய சீவிய உரித்தை தக்க வைத்துக் கொண்டு நன்கொடை வழங்குவதையே தவறான சொற்பதம் மூலம் பயன்படுத்தி மக்கள் வருகின்றனர். ஆகவே உறுதிக் காணிகள் விடயத்தில் "சீவிய உரித்து" (LIFE INTEREST) என்பது வேறு "பின்னுரித்து" (NOMINEE) வைத்து நன்கொடை வழங்குவதல் என்பது வேறு.
தொடர்புடைய சட்டங்கள்:
- Wills Ordinance (Cap. 81)
- Registration of Documents Ordinance (Cap. 117)
- Land Development Ordinance (Nominee only for LDO lands)
முடிவு :
உறுதி காணிகளில் பின்னுரித்து எழுதுவது சட்டப்படி செல்லுபடியாகாது!
சொத்தினை உங்கள் மரணத்தின் பின்னர் யாருக்கு சென்றடைய வேண்டும் என விரும்பினால் "மரணசாசனம் (Testament) அல்லது இறுதி விருப்பாவணம் (Last Will)” எழுதுங்கள். இதுவே ஒரே சட்டப்பூர்வமான வழி ஆகும்....!
சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(வீடியோ இங்கே )