சங்குப்பிட்டி பெண் கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது!
பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றி எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. குறித்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.
அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 
32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    