Permit or அளிப்பு காணி உடையவர் இறந்தால் காணி யாருக்குச் செல்லும்? - சட்ட ஆலோசனை
LDO காணி என்றால் என்ன?
LDO (Land Development Ordinance) என்பது அரசாங்கம் விவசாயிகளுக்கும் நிலம் இல்லாதவர்களுக்கும் காணி வழங்கும் ஒரு சிறப்பு சட்டம்.
இந்தச் சட்டத்தின் கீழ் அரசு வழங்கும் காணி இரண்டு வகைகள்:
- Permit (அனுமதிப் பத்திரம்)
- Grant (அளிப்பு பத்திரம்)
இவை இரண்டும் அரசின் உரிமையிலிருந்து வழங்கப்படும் நிலங்கள். அதாவது, நீங்கள் விலைக்கு வாங்கிய நிலம் அல்ல அரசால் உங்களுக்கு உங்களுடைய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலம்.
அந்த காட்சியைப் பெற்று நபர் இறந்தால் என்ன நடக்கும்?
Land Development Ordinance Section 72 படி: ஒரு Permit அல்லது Grant வைத்திருக்கும் நபர் இறந்தால், அந்த நிலம் தானாகவே அவரது குடும்பத்தினருக்குச் சட்டரீதியாக செல்லாது!
அவர் உயிரோடு இருக்கும் போது ஒரு "பின்னுரித்தாளர்" (Nominated Successor) ஒருவரை நியமித்திருந்தால் மட்டும் அந்த நபருக்கு காணி சட்டரீதியாக சென்றடையும். (அதற்கும் பின்னுரித்தை முன்னுரித்தாக மாற்றம் செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இந்த விடயம் தொடர்பில் விரிவான ஒரு பதிவினை விரைவில் வழங்குகிறேன்)
அந்த நியமனம் (Divisional Secretary) பிரதேச செயலகத்தில் அல்லது காணிப்பதிவக அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு ஆகும்.
காணி வைத்திருப்பவர் பின்னுரித்தாளர் (Nominee) ஒருவரை நியமனம் செய்யாமல் இறந்தால் என்ன ஆகும்?
ஒரு நபர் யாரையும் தனது பின்னுரித்தாளராக அல்லது சட்ட வாரிசாக நியமிக்காமல் இறந்தால் அந்த காணி மீண்டும் அரசாங்கத்திற்குத் திரும்பும். அதாவது, அந்த நபரின் குழந்தைகள் அல்லது மனைவி தானாகவே உரிமை பெற முடியாது.
LDO சட்டத்தின் Third Schedule படி சில சந்தர்ப்பங்களில் மனைவிக்கு வாழ்நாள் உரிமை (Life Interest) வழங்கப்படலாம். ஆனால் முழுஉரிமை (Ownership) அரசினால் மட்டுமே நிர்ணயிக்கப்படும்.
சட்டப் பிரிவு - முக்கிய கருத்துக்கள் (Legal Principles)
1. முதலில் — மனைவி/கணவனின் உரிமை (Spouse’s life interest):
- LDO இன் விதிகளுக்கு ஏற்ப, permit-holder அல்லது grantee ஒருவர் இறந்தால், அவருடைய கணவன்/மனைவி உடனடியாக வாழ்நாள் உரிமையுடன் (life interest) அந்த நிலத்தில் சில உரிமைகளை கொண்டிருப்பார். இந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டு, பிறகு வரிசு அந்தஸ்து உடைய நபர்கள் அதனாலேயே உரிமை பெறுவர்.
2. பின்னுரித்து நியமித்தல் (Nomination of a successor) முக்கியத்துவம்:
- Permit/Grant வைத்திருப்பவர் உயிருள்ள போது தமது "successor"(வாரிசு) ஒருவர் அல்லது பலரை தானாக முன்வந்து நியமிக்க முடியும் — இது எளிய வழியாக உள்ளதுடன் எதிர்கால முரண்பாடுகளை தவிர்க்கும். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டால் அதற்கு உரித்தான நபர் நியாயமான சட்டமுறைப்படி உரிமையைப் பெறுவர்.
3. பின்னுரித்து நியமனம் இல்லாமல் இருப்பின் என்ன நடக்கும்?:
- நியமனம் இல்லையெனில் அல்லது நியமிக்கப்பட்டவர் பொருத்தமான முறையில் succession செய்யவில்லை என்றால், Third Schedule - Rule 1 இல் குறிப்பிடப்பட்ட குடும்ப வரிசை விதிகளின்படி காணியின் உரிமை சரிபார்க்கப்படும்.
- சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக நியமனங்கள், கடன், அல்லது பொருளாதார காரணங்களால் விதிமுறைகள் பின்பற்றப்படா விட்டால், காணி உரிமையை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவோ/மீண்டும் (reverse) மீளப்பெற்றுக் கொள்ளப்படவோ வாய்ப்புக்களும் உண்டு.
4. பின்னுரித்து நியமனம் மட்டும் போதுமானதா? (Mere nomination is not always enough):
- சில நீதிமன்ற முடிவுகளின் படி ஒரு நியமனம் மட்டுமே உண்மையான காணி உரிமை பரிமாறலை உறுதி செய்யாது; சில நேரங்களில் அதை பதிவு செய்து, சிறந்த முறையில் endorsement/official recognition அத்தாட்சிப்படுத்தி ஆவணம் பெற்றிருத்தல் வேண்டும். பல வழக்குகளில் பல நீதிமன்ற தீர்ப்புகள் இதை வலியுறுத்தியிருக்கின்றன.
குறித்த காணியை உடைய இறந்தவரின் குடும்பத்தினர் செய்ய வேண்டியவை (Step-by-Step):
- மரணச் சான்றிதழ் (Death Certificate) எடுக்கவும்.
- Permit அல்லது Grant ஆவணங்களைப் பாதுகாக்கவும்.
- Divisional Secretariat அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு “Successor Nomination” செய்யப்பட்டு உள்ளதா என உறுதி செய்யவும்.
- நியமிக்கப்பட்ட வாரிசு இருப்பின், அவரின் ஆவணங்கள் மற்றும் அடையாளங்களைச் சமர்ப்பிக்கவும்.
- நியமனம் இல்லையெனில், Third Schedule படி குடும்ப வரிசை சான்றுகளுடன் பிரதேச செயலகத்தில் விண்ணப்பிக்கவும்.
முக்கிய அறிவுரை:
நீங்கள் தற்போது LDO காணி வைத்திருப்பவராக இருந்தால் உங்கள் குடும்பம் எதிர்காலத்தில் பிரச்சினை அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக இப்போதோ பின்னுரித்தாளர் ஒருவரை நியமிக்கவும் (Nominate Successor). இது ஒரு எளிய செயற்பாடு ஆனால் மிகவும் முக்கியமானது.
சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள்:
- - Sections 48, 51, 72 of the Land Development Ordinance
- - Third Schedule – Rules on Nomination & Succession
நன்றி
சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(வீடியோ இங்கே )