வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனை
 
                வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக முன்பள்ளி மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண்பரிசோதனை நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, 'நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்' வடக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களுடன் இணைந்து யாழ். போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கான நிதி அனுசரணையை அலாகா அறக்கட்டளை (மலேசியா) மூலம், அசிஸ்ட் ஆர்ஆர் (இங்கிலாந்து மற்றும் இலங்கை) ஊடாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனை முன்னெடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட 1,150 ஆசிரியர்கள் பயிற்றப்பட்டனர்.
அவர்கள் ஊடாக கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையிலான குழுவினர் கண்பரிசோதனைகளை மேற்கொண்டனர். வடக்கிலுள்ள 9,313 மாணவர்கள் சுமார் 4.49 சதவீதத்தினர் கண்ணாடி தேவையுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த ஒட்டுமொத்த செயன்முறை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய 'தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்' என்ற நூல் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) ஆளுநர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், திட்டமிட்ட காலத்துக்குள் விரைவாக இதனைச் செய்து முடித்த மருத்துவ நிபுணர் மலரவன் தலைமையிலான குழுவினருக்கு நன்றிகளைக் கூறுகின்றேன்.

இதற்கு நிதியுதவி வழங்கக் காரணமான மருத்துவர் வேலாயுதம் சர்வேஸ்வரனுக்கும் எனது நன்றிகள்.
இந்தச் செயற்றிட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமானது. எமது மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம். கண்பார்வை குறைபாட்டுடன் இருந்த எமது மாகாணப் பிள்ளைகளுக்கு இன்று புதிய உலகத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
அவர்களது கல்வி மேம்பாட்டுக்கு வழி கிடைத்திருக்கின்றது. பல பிள்ளைகள் குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை.
பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது என்பதே தெரியாது. இவை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வகையில், பிள்ளைகளை தேடிச் சென்று நடத்திய இந்தச் செயற்றிட்டம் முறியடித்திருக்கின்றது.
இந்தத் திட்டத்துக்கு எங்கள் அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தத் திட்டம் ஏன் என்று யோசித்தவர்கள் கூட திட்டத்தின் நன்மையறிந்து பின்னர் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்றார்கள்.
மருத்துவ நிபுணர் மலரவனால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கவனத்திலெடுத்து தொடர்ந்தும் திட்டம் நடைமுறையாக ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும், என்றார் ஆளுநர். 
இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிச் செயலாளர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                    
 
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            