அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புத்தகம் வாசிப்பு செல்ஃபி: ரணிலின் மருத்துவ அறிக்கை மீது நீதவான் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விசாரணை இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட பின்னர், விக்கிரமசிங்கவுக்கு தமனி அடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் தடுப்புக்காவலில் இருந்தபோது அவரது நடத்தையையும் அவர் விமர்சித்துள்ளார். பொதுவாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் பொது அறைக்கு மாற்றப்படுவார்கள்.
எனினும் இந்த சந்தேகநபர் மறுநாளே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரணில் விக்ரமசிங்க சிரித்துக்கொண்டே, மருத்துவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் என்றும் திலீப பீரிஸ் கூறியுள்ளார். சந்தேகநபர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் ஆபத்தான நிலையில் இருக்கும்போது போரிஸ் ஜோன்சனின் புத்தகங்களை வாசித்தமை தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ரணில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பல்வேறு நபர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஒரு சாதாரண சந்தேகநபர் அல்லவென குறிப்பிட்ட மன்றாடியார் நாயகம், அவர் 36 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய நபர் என்று திலீப பீரிஸ் கூறியுள்ளார்.
எனவே பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பீரிஸ் கேட்டுக்கொண்டார். இதன்போது வாதிட்ட ரணில் விக்ரமசிங்க தரப்பு சட்டத்தரணி, திலக் மாரப்பன, தமது சேவை பெறுநர் முதலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது, மணிக்கணக்கில் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டார்.
இதன்போது கேள்வி எழுப்பிய நீதிவான், சந்தேகநபர் ஆபத்தான நிலையில், ஒருவேளை மரணத்திற்கு அருகில் இருந்திருக்கலாம் என்று நீங்கள் முன்னர் நீதிமன்றத்தில் சொல்லவில்லையா என்று திலக் மாரப்பனவிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த மாரப்பன, தமனி அடைப்பு இன்னும் உள்ளதாகவும், இப்போது மற்றொரு பாதை வழியாக இரத்தம் பாய்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து திருப்திகரமாகக் கண்டறிந்த பின்னரே முன்னாள் நீதவான் பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறிய நீதிவான் நெத்திகுமார, நீதிமன்றம் பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்யாது என்று தெரிவித்தார்.
இருப்பினும், மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால், அவற்றைத் தயாரித்த மருத்துவர்கள் அவற்றின் அடிப்படையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிவான், தொடர்புடைய பல விடயங்களை ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
