2026 ஆம் ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா?
மாகாண சபை தேர்தல்கள் குறித்து தீர்மானிப்பதற்கு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூட்ட உள்ளார்.
2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரைக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இருந்த போதிலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகள் அரசாங்கத்தின் தேர்தல் அட்டவணையை மாற்றியமைத்தது.
இதன் பின்னரே மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் பேசாது மௌனித்திருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அழுத்தங்களை கொடுத்த நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர், மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டம் இல்லை என்ற அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.
இவ்வாறானதொரு நிலையில், மாகாண சபை முறைமைக்கு எதிராக தொடக்கத்திலிருந்தே பெரிய அளவிலான உள் விவாதத்தை முன்னெடுத்து வந்த ஒரு கட்சியாக ஜே.வி.பி உள்ளது. 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம் மாகாண சபைகளை நிறுவ இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, அதற்கு எதிராக முதலில் வீதிகளில் இறங்கிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணி தான்.
மாகாண சபை முறைமைக்கு எதிரான போராட்டம் இறுதியில் ஒரு கிளர்ச்சியாக மாறியது, மேலும் 88-89 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஆயுதம் ஏந்தியது. இவ்வளவு வரலாற்றைக் கொண்ட ஜே.வி.பி போன்ற ஒரு கட்சி எவ்வாறு மீண்டும் மாகாண சபை முறையை ஏற்றுக் கொண்டு தேர்தல்களை நடத்த முடியும் என்பதே ஜே.வி.பி தலைமையகத்தில் தற்போது இடம்பெறும் விவாதங்களாகும்.
இதன்படி, மாகாண சபை முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தேர்தல்களை நிறுத்தி வைப்பது அல்லது காலவரையின்றி ஒத்திவைப்பது நிலைப்பாடாக ஆரம்பத்தில் இருந்தது.
மாகாண சபை முறையை எதிர்த்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பரவலாக்கத்திற்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அந்தப் பகுதிகளில் உள்ள இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தனி கலந்துரையாடல்கள் தேவை என்றும் ஜே.வி.பி கூறியுள்ளது. இந்த இரு விடயங்களுக்கு நடுவில்தான் ஆளும் தேசிய மக்கள் சக்தி போராடி வருகிறது. இதன் அடிப்படையில், எதிர்வரும் 7 ஆம் திகதி முன்வைக்க உள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கு பின்னர் சர்வ கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின் கீழ் நடத்துவதா ? அல்லது புதிய முறையின் கீழ் நடத்துவதா? என்பது குறித்து இதன்போது கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.
மேலும் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பான புதிய சுற்று கலந்துரையாடல்களும்; தொடங்கப்படும். அதன் பிறகு, பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கவும் அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
மறுபுறம் மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்ற முடிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக ஏதேனும் ஒரு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், குறைந்தது இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்.
- Leo Darshan-
(வீடியோ இங்கே )
அனுசரணை
