மரம் நடுகையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கிறீன் லேயர் அமைப்பு ..

மரத்தை நடுகை செய்வது அதனைப் பராமரிப்பது என்பது கூட விசமிகளின் செயலால் எமது மாகாணத்தில் சவாலாகி வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தார்.
மரம் நடுகையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய ஆளுநர், கிறீன் லேயர் அமைப்பு மிகப் பெரிய வேலைத் திட்டத்தை எமது மாகாணத்தில் முன்னெடுத்து வருகின்றது.
அந்த அமைப்பின் நிறுவுனர் சசிக்குமார் தனி ஒரு நபராக இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்.
அவர் இங்கு தனது அலுவலகத்தை திறப்பதற்கு முன்னரே, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மரம் நடுகையை முன்னெடுத்துள்ளார்.
அவர் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் மரம் நடுகையை முன்னெடுத்திருந்தார். இன்னமும் அதிகமான மரங்களை நடுமாறு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களைக் கோரியிருந்தேன். அவர்களும் அதை முன்னெடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.
கடந்த காலங்களில் பல தரப்புக்களாலும் மரம் நடுகை செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை பராமரிப்பதில் ஒரு சில தரப்புக்கள் வெற்றியடையவில்லை.
ஆனால் கிறீன் லேயர் அமைப்பு மர நடுகையை மாத்திரம் முன்னெடுக்காமல் அவற்றைப் பராமரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.
மரத்தை நடுகை செய்த பின்னர் அதை வெட்டுகின்றார்கள், அதன் பாதுகாப்புக்கு போடப்பட்ட கூடுகளை திருடிச் செல்கின்றார்கள், நெருப்பு வைத்து எரிக்கின்றார்கள். இப்படி மோசமான செயல்களைச் செய்வதால் பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது.
இந்தச் சவால்களைத்தாண்டி கிறீன் லேயர் அமைப்பு 10 இலட்சம் அல்ல 100 இலட்சம் மரங்களை நடுகை செய்யும் என எதிர்பார்க்கின்றேன், என்றார் ஆளுநர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



