போதைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் ஜனாதிபதி வேண்டுகோள்

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்பு கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன்.
சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் இந்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆசிரியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதுடன், நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கும் தீர்வு காண வேண்டும். ஆசிரியர் சேவையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வினை நிச்சயம் வழங்குவோம். புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவற்கு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் மக்கள் எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள். ஆகவே அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது எமது பொறுப்பு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
பல ஆண்டுகாலமாக பின்பற்றிய அரசியல்,பொருளாதார நடவடிக்கைகளின் பிரதிபலனை நாட்டு மக்கள் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்கொண்டார்கள். நிலையான பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பிரதான இலக்காகும்.
சட்டத்தை முறையாக செயற்படுத்தாமல் பொருளாதார ரீதியில் மீட்சிப்பெற முடியாது. வரையறுக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சியை நாங்கள் விரிவுப்படுத்தியுள்ளோம்.இலங்கையர்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானது எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. 2028 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்று குறிப்பிடுகிறார்கள். எவரும் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. 2028 ஆம் ஆண்டு கடன்களை திருப்பிச் செலுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவோம்.
அரசியல்வாதிகளின் தனிப்பட்ட மற்றும் குறுகிய தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டங்கள் மற்றும் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் தொடர்பிலும்,அதனால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பிலும் எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல விடயங்களை முன்வைக்கவுள்ளேன்.
அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் தேவைக்காக அரசியலமைப்பை திருத்தம் செய்த காலம், சட்டமியற்றிய காலம் முடிவடைந்து விட்டது. நாட்டு மக்களின் குறிப்பாக எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்திற்கொண்டு சட்டமியற்றுகிறோம். போதைப்பொருள் பாவனையில் இருந்து சிறுவர்களையும், இளைஞர்களையும் பாதுகாப்பது சவாலுக்குரியதாக உள்ளது.
போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்பு கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம்.போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன்.
சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் இந்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



